கடந்த 2021ம் ஆண்டு, நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘டாடா சன்ஸ்’ குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரைப் போலவே, பல முக்கிய பிரமுகர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங், காங்., தலைவர் ராஜேஷ் பைலட், பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி முன்னாள் முதல்வர் சாஹிப்சிங் வர்மா, பா.ஜ., பிரமுகர் கோபிநாத் முண்டே உள்ளிட்டோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
ஆண்டுதோறும் நடக்கும் சாலை விபத்துகளில் லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். இந்த இறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2021ல் நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கணக்குப்படி நாள் ஒன்றுக்கு சராசரியாக 426 பேரும், மணிக்கு 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விபத்துகளில், 3.71 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில், அளவுக்கு அதிகமான வேகத்தால் 60 சதவீத விபத்துகள் ஏற்பட்டுள்ளன. உயிரிந்தோர் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், விபத்துகள் மற்றும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளன.
கடந்த 2018ல் நடந்த சாலை விபத்துகளில் 1.52 லட்சம் பேரும், 2019ல் 1.54 லட்சம் பேரும், 2020ல் 1.33 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர்.கார், இரு சக்கர வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களை விட, பொது போக்குவரத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement