முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம், வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்பிசி – சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த நான், எம்எஸ்சி, எம்.எட் முடித்துள்ளேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. இதில் நான் பங்ேகற்றேன். இதில், 150க்கு 87.17 மதிப்பெண் பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், என் பெயர் இல்லை. ஆனால், வன்னியர் இடஒதுக்கீட்டின் கீழ் 75.1 மதிப்பெண் பெற்றவரின் பெயர் உள்ளது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுள்ளது.  இதனால், பலரது வாய்ப்பு பறிபோகிறது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வெளியான பட்டியலை ரத்து செய்ய வேண்டும். பட்டியலை ஆய்வு செய்து முறையான புதிய பட்டியல் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதி, ‘‘ஆசிரியர் தேர்வாணையம் நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் இறுதி முடிவு இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது’’ எனக் கூறி, மனுவிற்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர், ஆசிரியர் தேர்வாணைய தலைவர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 27க்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.