ஆப்கனை வீழ்த்திய பாகிஸ்தான்; இந்தியாவுக்கு எண்ட் கார்டு

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதியது. தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்ற நோக்கத்தில் களமிறங்கியது.

அதே சமயம் முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் டாஸ் முக்கிய பங்கு வகித்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் 35 ரன்களும், ஹரசத்துல்லா 21 ரன்களும், குர்பாஸ 17 ரன்களும், கரீம் 15 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில், ஹாரீஸ் ரூப் 2 விக்கெட்டுகளும், நசீம் ஷா, நவாஸ், சதாப் கான், ஹாசனைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 130 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பபே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் பாபர் ஆசம், தன் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பக்கர் சமான் 2 ரன்களில் வீழ்ந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிஸ்வான் அகமது ஜோடி சற்று நேரம் தாக்குபிடித்து ஆடியது. மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகமது 33 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிஸ்வான் 26 பந்துககளில் 20 ரன்கள் குவித்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய சதாப் கான் 26 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு கடைசி 18 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய பரூக்கி முதல் பந்தில் நவாஸ் விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் விட்டுக்கொடுத்து கடைசி பந்தில் குஷ்டில் ஷா விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து 19-வது ஓவரை வீசிய பரீத் 2-வது பந்தில் ஹாரீஸ் ரூப் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், 6 பந்தில் சிக்சர் அடித்த ஆசிப் அலி 5-வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் பரூக்கி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சருக்கு பறக்கவிட்ட நசீம் ஷா அடுத்த பந்தையும் சிக்கருக்கு தூக்கிவிட்டு பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.