ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, நவமலை, கவியருவி உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி உள்ள வனத்தில் காட்டு யானைகள், சிறுத்தை, மான்கள், வரையாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி ஆழியார் அணை அமைந்துள்ளதால், ஏராளமான வனவிலங்குகள் மாலை மற்றும் காலை நேரங்களில் தண்ணீர் தேடி அணை கரைக்கு வந்து செல்வது வழக்கம்.
அணை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, கடந்த சில தினங்களாக ஆழியார்-வால்பாறை சாலை, நவமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் குட்டியுடன் தாய் யானை ஒன்று சாலையோரங்களில் சுற்றித் திரிகின்றது. எனவே, வால்பாறை செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனமாக இயக்கி செல்ல வேண்டும் என்றும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.