தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுடன் வானதி சீனிவாசன், காயத்ரி ரகுராம் இருவரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கவுள்ளார். இறந்துபோன காங்கிரஸ் கட்சிக்கு நடைப்பயணம் மூலம் உயிர் கொடுக்க முயற்சிக்கின்றனர்.
சமீபத்தில்கூட காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், அங்கிருந்து விலகி எங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். கட்சியை பலப்படுத்தும் பலபரீட்சையை ராகுல் காந்தி நடத்துகிறார். காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பல். அதில் அவர் நடந்தாலும், ஓடினாலும், மாரத்தான் செய்தாலும் வேலைக்கு ஆகாது.

ஒருகாலத்தில் நாடு முழுவதும் இருந்த காங்கிரஸ் கட்சி குடும்ப ஆதிக்கம், ஊழல், நிர்வாக திறமை இன்மை போன்ற காரணங்களால் அவர்களே அவர்களை புதைத்துக் கொண்டனர்.
காலம் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல, ராகுல் காந்தியின் இந்தப் பயணம் அவர் உடல்நலத்துக்கு நல்லதாக இருக்கலாம். அதனால் நாட்டுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கு எந்த நல்லதும் நடக்கப் போவது இல்லை. தனிப்பட்ட தாக்குதலை நாங்கள் எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆனால் திமுக மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகள்தான் இந்த கலாசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

திராவிட மாடல் என எதையெல்லாம் சொல்கிறார்களோ, அதற்கு முரணாகத்தான் அவர்களின் செயல் உள்ளது. அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப்படாமல், கான்ட்ராக்டர்கள் பற்றிதான் கவலைப்படுகிறது.” என்றார்.