புதுடில்லி:பதிவுபெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனை தொடர்பாக, நாடு முழுதும் 110 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாடு முழுதும், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2,800 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் செயல்பாட்டில் உள்ள கட்சிகளை அடையாளம் காணுமாறு, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில், இந்த பட்டியலில் உள்ள பல கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது தெரிய வந்தது.
மேலும், தங்கள் கட்சியின் பேரில் வசூலிக்கப்படும் நன்கொடை வாயிலாக, பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 198 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியது. மேலும், கட்சியின் பணப்பரிவர்த்தனை, நிர்வாகிகள் பெயர் பட்டியல், முகவரி உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க தவறிய அங்கீகரிக்கப்படாத 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
சந்தேகத்துக்குரிய பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கட்சிகள் குறித்து வருவாய்த் துறையிடம் தேர்தல் கமிஷன் புகார் அளித்தது. இது, மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, குஜராத், புதுடில்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா உட்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள, பதிவுபெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சொந்தமான 110 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement