செல்போன்களை திருப்பி தரக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் 13 கைதிகள் தற்கொலை முயற்சி

திருச்சி:  திருச்சி மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறப்பு முகாமில் 108 ஈழத்தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம், தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் (3 டன்) கடத்திய வழக்கு சம்பந்தமாக, திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சிறப்பு முகாமில் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து 60 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தங்களிடம் இருந்து போலீசார் பறித்து சென்ற செல்போன்களை திருப்பி தர வேண்டும். விரைவில் தங்களை விடுவிக்க வேண்டும் எனக்கூறி சிறப்பு முகாமில் உள்ள 13 பேர் நேற்று மாலை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தகவல் அறிந்த சிறப்பு முகாம் சிறை அதிகாரிகள், அனைவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.