கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மோலாய் கட்டாக்கிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேற்கு வங்கத்தில் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரிடம் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த மாநில சட்டத்துறை அமைச்சர் மோலாய் கட்டாக்கிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் அசான்சோலில் உள்ள வீடு, கொல்கத்தாவில் உள்ள 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அசான்சோலில் சோதனையின்போது துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மோலாயின் நெருங்கிய கூட்டாளிக்கு சொந்தமான கொல்கத்தாவின் அலிபோராவில் உள்ள வீடு, தெற்கு 24 பார்கனாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பரில் உள்ள இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.