நெல்லையில் நாளை ரூ.330 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாகர்கோவில்: 3நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு  சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், ராகுல்காந்தியின் நடை பயணத்தை தொடங்கிய நிலையில், நாளை திருநெல்வேலியில்,  ரூ.330 கோடியில் நலத்திட்டங்களை தொடங்க்கி வைக்கிறார்.  இன்று குமரியில் இருந்து நெல்லை திரும்பும் முதல்வர், இரவு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

அதைத்தொடர்ந்து, நாளை காலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில்  முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

நெல்லை மாநகராட்சி சார்பில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்துள்ள 5 பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

பாளை மனக்காவலன்பிள்ளை சாலையில் ரூ.3.06 கோடியில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையம், அதே சாலையில் ரூ. 9.88 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மையம், ரூ.15.12 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள வ.உ.சி. மைதானம், ராமையன்பட்டியில் 2 மெகாவாட்டில் முடிக்கப்பட்டுள்ள 2 சோலார் பேனல் மையங்களை தொடங்கி வைக்கிறார். மொத்தம் மாநகராட்சி பகுதியில் சுமார் ரூ.54.82 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், முன்னோடி வங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

நெல்லை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சட்டக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆகிய துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் கல்வி உதவி பெறுதல், வேளாண் பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (சமூகப்பாதுகாப்பு திட்டம்), முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, வனத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 30,658 பயனாளிகளுக்கு ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதனையொட்டி நெல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.