வரும் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களம் இறங்க உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதற்கான சாத்தியங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் பார்ப்போம்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர் நிதிஷ் குமார். அந்தக் கூட்டணியில் இருந்துகொண்டு பிஹார் முதல்வராக பதவி வகித்து வந்த அவர், முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டே கூட்டணியை மாற்றிக்கொண்டவர். பிஹாரில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக, நிதிஷ் குமாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது அதிகாரத்தை இழந்து எதிர்க்கட்சியாகி உள்ளது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் பிஹாரில் ஒன்றிணைந்துள்ளன.
இந்த பிஹார் மாடலை தேசிய அளவில் விரிவுபடுத்தினால், அதாவது பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்தால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுத்துவிட முடியும் என்று உறுதிபட கூறும் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகக் கூறி அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
மெகா கூட்டணி சார்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி பிஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு, டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிதிஷ் குமார் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஷரத் யாதவ் என அவர் நடத்திய சந்திப்புகள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
71 வயதாகும் நிதிஷ் குமார், தற்போது 8-வது முறையாக பிஹார் முதல்வராக உள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இரு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தேசிய அளவில் நன்கு அறிமுகமான தலைவரான நிதிஷ் குமார், தேசிய அரசியலில் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தாலும், தனது சந்திப்பின் நோக்கம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
எனினும், பிரதமர் வேட்பாளராக களம் இறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள தலைவர் அவர் என தெரிவித்துள்ளார் பிகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ். பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு நிதிஷ் குமாரை விட சிறந்த தேர்வு வேறு இல்லை என கூறுகிறார் சரத் யாதவ்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சமீபத்தில் பாட்னாவிற்கே சென்று தனது ஆதரவை நேரில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருடனும் நல்லுறவு கொண்டுள்ள நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சரியான ஆளுமையாக கருதப்படுகிறார். எனினும், எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக அவர் அனைவராலும் ஏற்கப்படுவாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
குறிப்பாக, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோர் ஏற்பார்களா என்பதை இப்போதே கணிப்பது கடினம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வதற்கும் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிப்பதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள நிதிஷ் குமார், அந்தத் தலைமை இடத்திற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– பால. மோகன்தாஸ்