மும்பை: மீனவ சமூகத்தை அவமதிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்த நடிகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை வர்ஷா உஸ்கான்கர், ஆன்லைனில் மீன் விற்பனை செய்யும் செயலி (ஆப்ஸ்) விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில், ‘கோலி’ சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகளில் நடித்துள்ளார். இதுகுறித்து மீனவர் நலக்குழுவின் மகளிரணி தலைவர் நயனா பாட்டீல் கூறுகையில், ‘மீன் விற்கும் கோலி சமூக பெண்களை அவமதிக்கும் வகையில் விளம்பர காட்சியில் வர்ஷா உஸ்கான்கர் நடித்துள்ளார்.
அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரது படப்பிடிப்பு செட்டுகளுக்கு சென்று அழுகிய மீன்களை கொண்டு சென்று கொட்டுவோம். கோலி சமூக பெண்களை அவமானப்படுத்தியதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றார். இந்நிலையில் நடிகை வர்ஷா உஸ்கான்கர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘ஒட்டுமொத்த கோலி சமூக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் நடித்த விளம்பரத்தில் கோலி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அவர்களுக்காக கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் மனதை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. கோலி சமூகத்தினர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.