சென்னை: ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
சிந்து சமவெளியில் இந்திய தொல்லியல் ஆய்வக தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் அகழாய்வு செய்து 100 ஆண்டுகளாகிவிட்டன. ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பாதியளவுக்குத்தான் அகழாய்வு செய்திருக்கிறோம். இன்றும் ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல புதிர்கள் விடுவிக்கப்படவில்லை.
திராவிட மொழிக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ.77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடும் உழைப்பால், பல அரிய தகவல்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பேசும்போது, “நூலாசிரியர் வழக்கமான பத்திரிகையாளர் அல்ல. தொல்லியல் மட்டுமின்றி, அணு ஆற்றல், விண்வெளி ஆராய்ச்சி, இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஹரப்பா நாகரிகம் தொடர்பாக நிறைய ஆராய வேண்டியுள்ளது. நானும் அங்கு ஒருமுறை சென்றுள்ளேன்” என்றார்.
நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, “ஹரப்பா நாகரிகம் தொடர்பாக 1921-ல் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் நினைவாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 600-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குழுமப் பதிப்பாளர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.