திண்டுக்கல்: கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நடைபயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சென்ற இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நேற்று நடைபயணம் துவக்கினார். இந்நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சி நிறுவனரான அர்ஜூன் சம்பத் கூறியிருந்தார். இதற்காக, நேற்று முன்தினம் இரவு ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அர்ஜூன் சம்பத் புறப்பட்டு வந்தார். நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, திண்டுக்கல் நகர் போலீசார், அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
