எடப்பாடி: சாலையை மூழ்கடித்து செல்லும் உபரி நீர் – தண்ணீரில் சறுக்கி விழும் பள்ளி மாணவர்கள்

எடப்பாடி பகுதியில் தொடர் கன மழையால் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையை தண்ணீர் மூழ்கடித்துச் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. இந்நிலையில் எடப்பாடி நகரின் தெற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், ஏரியிலிருந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேறி வருகிறது. பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து உருவாகி வரும் சரபங்கா நதி நீருடன், தேவன கவுண்டனார் பகுதியில் உள்ள சூரியன் மழை ஓடை நீரும் ஒன்று சேர்ந்து வருவதால் ஏரி நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
image
ஏரியின் மறு கரையில் உள்ள மலங்காடு, தேவன கவுண்டனூர், செட்டி காடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பெரியேரி கரையினை கடந்து எடப்பாடி நகருக்கு வந்து செல்லும் முக்கிய சாலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக தண்ணீர் வெளியேறுவதால் அந்த சாலையில் பாசம் பிடித்துள்ளது.
image
இந்த நிலையில் ஏரியிலிருந்து பெருக்கெடுத்து செல்லும் உபரி நீரை கடந்து செல்லும்போது பொதுமக்களும், மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சறுக்கி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. வழுக்கி விழும்போது உடைகள் ஈரமானதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மீண்டும் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற மழைக்காலங்களில் அடிக்கடி மாணவர்கள் விபத்தில் சிக்கிடும் சூழல் தொடர்ந்திடும் நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வர மாற்று வழி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.