நாகர்கோவில்: “தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?” என்று குமரியில் நடைபயணத்தின்போது அனிதாவின் தந்தை, சகோதரரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
ராகுல் காந்தி இன்று 2-வது நாளாக ‘இந்திய ஒற்றுமை பயணம்’ மேற்ண்டபோது நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதாவின் தந்தை
சண்முகம், சகோதரர் மணிரத்தினம் ஆகியோரிடம் பேசினார். அவர் குமரி மாவட்டம் கொட்டாரத்தில் இருந்து சுசிந்திரம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், தந்தை சண்முகம் ஆகியோர் நடைபயணத்துடன் இணைந்தனர். அப்போது ராகுல் காந்தியிடம் மணிரத்தினம், ”தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதை கேட்ட ராகுல் காந்தி, அவர்களிடம் பேசியவாறே நடந்து சென்றார்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் மணிரத்தினம் தெரிவிக்கையில், ”ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதை அறிந்து அவரை சந்திப்பதற்காக நான் வந்திருந்தேன். கடந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதை அவரிடம் நினைவூட்டினோம். மீண்டும் அதை வலியுறுத்த அவரை சந்தித்தோம். ஜோதிமணி எம்.பி. அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தார்.
நீட் தேர்வுக்கு தற்போது அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கு முதல் குரல் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது. அந்த நீட் தேர்வால் எனது தங்கை அனிதா மரணம் அடைந்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறப் போகிறது. அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நான் சொன்னதையும் அவர் கேட்டார். இந்த யாத்திரையின் போது நான் அவரை சந்தித்து நீட் தேர்வுக்கான விலக்கு கோரிக்கையை வலியுறுத்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
ஜவஹர்லால் நேரு குடும்பத்தினர் இந்திய சுதந்திரத்திற்காக போராடினார்கள். ஆனால், ராகுல் காந்தி தற்போதைய ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சிகளிடமிருந்து இந்தியாவை மீட்க போராடுகிறார். இதற்காக ராகுல் காந்தி இந்த யாத்திரையை தொடங்கியுள்ளார். அதில் ராகுல் காந்தியுடன் நாங்களும் நடப்பதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது.
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக நாம் உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை அவரிடமும் தெரிவித்தேன். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி ஜெயிப்பதற்காக என்னால் முடிந்த வேலைகளை செய்வேன். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற அனைவரும் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட வேண்டும் என்பதை நான் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில அரசின் கோரிக்கைகளை கேட்கும் அரசாக மத்திய அரசு இருக்க வேண்டும். அதற்கு ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு ராகுல் காந்தி, தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டார். எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்கூட்டியே தெரிந்து செயல்படக்கூடிய மாநிலமாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். எந்த மாநிலத்திலும் எதையும் காங்கிரஸ் திணிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்” என்றார்.