தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (30). இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை ஒன்றரை வயதான குழந்தை நித்தின், பாட்டி ராஜம்மாளுடன் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
திடீரென வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்டு நந்தினி சென்று பார்த்துள்ளார். அப்போது, தொடர் மழையால் நனைந்திருந்த வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்து சிறுவன் நித்தின் மற்றும் பாட்டி ராஜம்மாள் (65) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கிக் கிடந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு மாரண்ட அள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ராஜம்மாள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.