கோல்கட்டா, :நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் காதக்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, குனுஸ்தோரியா மற்றும் கஜோராவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி கடத்தப்படுவது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாநில சட்ட அமைச்சர் மோலோய் காதக்குக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணைக்கு வரும்படி ‘சம்மன்’ அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை.இந்நிலையில், மோலோய் காதக்குக்கு சொந்தமான மூன்று வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அவருடைய உதவியாளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
ராஜஸ்தானிலும் அதிரடி
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர யாதவின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இவருடைய குடும்பத்தினர் சில தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் நடந்துள்ள வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement