கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் ரஷியா -உக்ரைன் போர் உலக அளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் எரிசக்தி தட்டுப்பாடு, இலங்கையில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு என இருநாடுகளுக்கு இடையேயான போர் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதற்கு உக்ரைன் -ரஷிய போர் மறைமுக காரணமாக அமைந்துள்ளது.
இதன் விளைவாக நெல்லை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய உலகின் பல நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நாட்டில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும், இவற்றின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் நெல், அரிசி ஏற்றுமதி்க்கு 20% வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசிக்கு மத்திய அரசு அண்மையில் ஜிஎஸ்டி வரி விதித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நெல், அரிசி ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.