டெல்லியில் பெரும்பாலான நேரங்களில், காற்றின் தரம் குறைந்தும், காற்று மாசுபாடு அதிகரித்தும் காணப்படுகிறது. இந்நிலையில், குளிர்காலத்தில் காற்றின் தரம் மோசமடைவதை தடுக்க செப்டம்பரில் இருந்து, 2023 ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது டெல்லி அரசு.

அதோடு, “இந்தத் தடையானது ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும் பொருந்தும். டெல்லி காவல்துறை, டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு, வருவாய்த்துறை இணைந்து பட்டாசுகளின் மீதான இந்தத் தடையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது’’ என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பருவத்தின்போது பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல் அறுவடையின் எச்சங்களை எரித்து, அடுத்த உழவு சுழற்சிக்கு வயல்களைத் தயார் செய்கின்றனர். இந்த நடைமுறையால் வட இந்தியாவின் பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவானது அதிகரிக்கிறது. குறைந்த வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் தொழில்துறை மாசுபாடு போன்ற பிற காரணிகளும் காற்று மாசுபடும் சிக்கலை அதிகப்படுத்துகின்றன.

பெரும்பாலும், தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிக்கும் போது, காற்றின் தரக் குறியீடானது, வெகுவாக குறைகிறது. இதன் காரணமாக உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே மாசுப்பாட்டை குறைக்க டெல்லி அரசு இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.
இதேபோல கடந்த ஆண்டும் டெல்லி அரசு காற்று மாசுபாட்டை தடுக்க, செப்டம்பர் முதல் ஜனவரி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.