மணிரத்னத்தின் முதல் பட ஹீரோ முரளி..காலம் பறித்துச்சென்ற கருப்பு நட்சத்திரம் நினைவு நாள்

இவர் திரையுலகில் இருக்கும் வரை இவர்தான் கல்லூரி மாணவர்.கடைசி வரை கல்லூரி மாணவராகவே நடித்தவர் முரளி. தனது மகனின் முதல் படமே முரளியின் கடைசி படமானது.

வயதானாலும் இளம் வயது தோற்றத்துடன் நடித்த நடிகர் முரளி இளம் வயதிலேயே மரணம் அடைந்தது தமிழ் ரசிகர்களை மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகர் முரளியின் நினைவுநாள் இன்று 46 வயதில் மரணம் அடைந்த முரளி 2010 ஆ ஆண்டு இதே நாளில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

ஹீரோ பிம்பத்தை உடைத்த வழியில் வந்த நாயகன் முரளி

தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் அழகான தோற்றம் வெள்ளை உருவம், சுருட்டை முடி என்று கதாநாயகனுக்குரிய பிம்பத்துடன் நடித்து வந்த காலத்தில் கருத்த உருவம், பரட்டைத் தலை என நடிக்க வந்து ஹீரோ பிம்பத்தை உடைத்து இன்று வரை உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய வருகைக்கு பின் அவரைப்போன்ற தோற்றம், ஹேர் ஸ்டைலுடன் வந்தார் விஜயகாந்த். இவர்கள் புகழின் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் 1984 ஆம் ஆண்டு பூவிலங்கு படத்தில் முரட்டுத்தனமான இளைஞர் ரோலில் அதே கருத்த உருவம் பரட்டை தலையுடன் அறிமுகமானார் முரளி.

ரஜினி, விஜயகாந்த் வரிசையில் அறிமுகமான முரளி

ரஜினி, விஜயகாந்த் வரிசையில் அறிமுகமான முரளி

ரஜினிகாந்தின் சொந்த மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் முரளி. முரளியின் தந்தை பட தயாரிப்பாளர் என்பதால் சினிமா சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்த முரளி திடீரென பூவிலங்கு படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். முரட்டுத்தனமான ஒரு இளைஞனான பாத்திரத்தில் நடிக்க அவர் முதல் படத்திலேயே தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படத்தின் பாடலும் ஹிட் அடித்தது. முரளி நடிக்க வந்த காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் என முன்னணி நடிகர்கள் இருந்த காலகட்டம். இளைஞராக பூவிலங்கு படத்தில் அறிமுகமான முரளி அதே ஆண்டில் இங்கேயும் ஒரு கங்கை, புதியவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

 பாடலுக்காக பெயர் பெற்ற முரளியின் படங்கள்

பாடலுக்காக பெயர் பெற்ற முரளியின் படங்கள்

இங்கேயும் ஒரு கங்கை படத்தில் காதலியை பிரிந்து நகரத்தில் வேலைக்குச் சென்று இருக்கும் இளைஞரின் கதை. இந்த படத்தில் வரும் சோலை புஷ்பங்களே பாடல் மூலம் மீண்டும் பி.சுசிலாவை திரையில் பாட வைத்து எடுக்கப்பட்ட படம். மிகச் சிறப்பான பாடலாக அந்த பாடல் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. புதியவன் படத்தில் நகரத்து இளைஞராக நடித்தார் முரளி. இந்த படமும் முரளிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. 1985 ஆம் ஆண்டு முரளிக்கு மிக முக்கியமான ஆண்டு ஆகும். மணிரத்தினம் முதன் முதலில் இயக்கிய பகல் நிலவு படத்தில் முரளி ஹீரோவாக நடித்தார். மணிரத்தினம் மௌன ராகம் எடுக்க கதையை யோசித்து வைத்திருந்த நேரத்தில் நண்பர் டிஜி.தியாகராஜன் ஆக்சன் படமாக கேட்க அப்படி உருவான படம் தான் பகல் நிலவு.

மணிரத்னத்தின் முதல்படம் பகல்நிலவு ஹீரோ முரளி

மணிரத்னத்தின் முதல்படம் பகல்நிலவு ஹீரோ முரளி

இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தின் பல காட்சிகள் பின்னர் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தின் காட்சிகளிலும் பிரதிபலித்தது. இந்த படத்தில் சத்யராஜின் விசுவாசியாக முரட்டுத்தனமான இளைஞனாக முரளி வருவார். இந்த படத்திலும் பாடல்கள் சிறப்பாக இருந்தது. பூமாலையே படலும், மைனா மைனா பாடலும், நீ எப்போது பாடலும், பூவிழி மேடை பாடலும் மிகவும் பிரசித்தி பெற்றது. முரளி படம் என்றாலே இனிமையான பாடலுக்கு பஞ்சம் இருக்காது என்கிற அளவில் அடுத்த படமும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்த படம் தான் கீதாஞ்சலி இந்த படத்தில் இளையராஜாவின் குரலுக்காகவும், இசைக்கவுமே படம் சிறப்பாக ஓடியது. தொடர்ந்து நடித்து வந்த முரளியின் வாழ்க்கையில் புதுவசந்தம் படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது முரட்டுத்தனமான இளைஞர் என்கிற இமேஜை மாற்றி அமைதியான ஒரு இளைஞராக முரளி இந்த படத்தில் நடித்தார். இந்த படம் பெரிதாக பேசப்பட்டது.

பி, சி செண்டர்களின் நம்பிக்கை நாயகன்

பி, சி செண்டர்களின் நம்பிக்கை நாயகன்

இதற்கு அடுத்து நாங்கள் புதியவர்கள், நம்ம ஊரு பூவாத்தா போன்ற படங்கள் முரளிக்கு பெயர் வாங்கி கொடுத்தன. முரளிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படம். இந்த படத்தில் இதயமே இதயமே பாடலும், பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா, பூங்கொடிதான் பூத்ததம்மா, பிரபுதேவா ஒரு பாடலில் சில காட்சிகளில் வரும் ஏப்ரல் மேயிலே பாட்டும் பெரும் வரவேற்பை பெற்றது. மருத்துவ கல்லூரி மாணவராக இதில் முரளி நடித்தார். இதிலிருந்து முரளி கல்லூரி மாணவராக பலங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தாலி கட்டிய ராசா, என் ஆசை மச்சான், ,விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் முரளி முரளியாகவே கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.

 தேசிய விருதுப்பெற்ற வெற்றிக்கொடி கட்டு

தேசிய விருதுப்பெற்ற வெற்றிக்கொடி கட்டு

சிவசக்தி பாண்டியனின் காலமெல்லாம் காதல் வாழ்க படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம். அதே ஆண்டில் வெளியான சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. 98 ஆம் ஆண்டில் வெளியான என் ஆச ராசாவே, தேசிய கீதம் போன்ற படங்களுடன் 1999 ஆம் ஆண்டு வெளியான இரணியன் படம் முரளியின் வீரமான நடிப்பை வெளிகொணர்ந்தது. அதே ஆண்டில் வெளியான சேரனின் வெற்றிக்கொடி கட்டு படம் தேசிய விருதைப் பெற்றது.

நகைச்சுவையில் வடிவேலுவுடன் கலக்கிய சுந்தரா டிராவல்ஸ்

நகைச்சுவையில் வடிவேலுவுடன் கலக்கிய சுந்தரா டிராவல்ஸ்

2001 ஆம் ஆண்டு ஆனந்தம், சொன்னால் தான் காதலா, சமுத்திரம், அள்ளித்தந்த வானம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நடித்தார். முரளியின் படங்கள் என்றால் ஜனரஞ்சகமாக இருக்கும், பி.சி சென்டர்களில் நன்றாக ஓடும், தென் மாவட்ட இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக முரளி நேசிக்கப்பட்டார். கடல் பூக்கள் படத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார்.வடிவேலுவும் முரளியும் நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நகைச்சுவை வேடத்தில் கலக்கினார். 20 ஆண்டுகள் இளம் நாயகனாக கல்லூரி மாணவராக நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற தோற்றத்தில் நடித்த முரளிக்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தன.

மகன் அதர்வாவின் முதல் படம் தந்தை முரளியின் கடைசி படமான சோகம்

மகன் அதர்வாவின் முதல் படம் தந்தை முரளியின் கடைசி படமான சோகம்

முரளியின் மகன் அதர்வாவை கதாநாயகனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 2010 ஆம் ஆண்டு அதர்வா நடித்த பாணா காத்தாடி படம் வெளியானது. மகன் நடித்த பாணாகாத்தாடி பட ப்ரமோஷன் வேலைகளில் மும்மூரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் முதல் நாள் (செப்.7)மாலையிலிருந்தே அவருக்கு லேசாக நெஞ்சு வலி இருந்துள்ளது, ஆனால் மறுநாள் அதிகமான பின்னரே போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கும்போதே உயிர் பிரிந்தது. முரளியின் கடைசிப்படம் அவரது மகனின் முதல் படம் என்பது சோகமான ஒன்று. அவரது 100 வது படத்தை ஆக்‌ஷன் படமாக எடுக்க படபிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் இயற்கை அந்த கருப்பு நட்சத்திரத்தை கவர்ந்து சென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.