புதுடெல்லி: ஆர்க்டிக் தொடர்பான விஷயங்களில் ரஷ்யாவுடனான தனது கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்றும், எரிசக்தி துறையிலும் ஒத்துழைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொண்ட கிழக்குப் பொருளாதார மன்றத்தில், ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, தொடக்கத்திலிருந்தே இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தை வழியை, பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் மோடி கூறினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, அமைதியான வழியில் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது என்றார்.
2019 ஆம் ஆண்டில் நடந்த மன்ற உச்சிமாநாட்டில், நேரிடையாக பங்கேற்றதை நினைவு கூர்ந்த மோடி, அந்த நேரத்தில் இந்தியா தனது “Act Far-East” கொள்கையை அறிவித்ததாகவும், அதன் விளைவாக, பல்வேறு துறைகளில் Russian Far East நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறினார். “இந்தக் கொள்கை இப்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ‘சிறப்பு முக்கியத்துவம் பெற்ற முக்கிய மூலோபாய கூட்டுறவின்’ முக்கிய தூணாக மாறியுள்ளது,” என்று பிரதமர் மேலும் கூறினார்.
“விளாடிவோஸ்டோக்கில் இந்தியத் தூதரகம் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நகரத்தில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு இந்தியா. அதன்பிறகு, இந்த நகரம் எங்கள் உறவில் பல மைல்கற்களுக்கு சாட்சியாக உள்ளது” என்றும், “இந்த மன்றத்தை நிறுவியதற்காக புடினின் தொலைநோக்கு பார்வைக்காக நான் அவரை வாழ்த்துகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.
பிராந்தியத்துடனான இந்தியாவின் உறவுகளில் தொடர்புகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று மோடி மேலும் கூறினார். “எரிசக்தியுடன், ரஷ்யாவின் தூர கிழக்கு நாடுகளில் இருந்து மருந்து மற்றும் வைரத் துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில், உலகின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் மேலும் கூறினார். “உக்ரைன் போர் மற்றும் கோவிட் தொற்றுநோய் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவு தானியங்கள், உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு வளரும் நாடுகளுக்கு மிகுந்த கவலையளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.