சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து ரஜினியின் தீம் மியூசிக்கை படக்குழு திடீரென வெளியிட்டுள்ளது.
வேகமெடுக்கும் ரஜினியின் ஜெயிலர்
அண்ணத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்து கோலிவுட்டின் டைம்லைனில் வந்த நெல்சன், ஜெயிலர் மூலம் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள்
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்து, படப்பிடிப்பு தொடங்கிய நாளிலேயே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, யோகிபாபு, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முதற்கட்டமாக ஒப்பந்தமாகினர். அதனைத் தொடர்ந்து சரவணன், ஜெய் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என இன்னும் அப்டேட் வெளியாகவில்லை.

திடீரென வெளியான தீம் இசை
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து ரஜினியின் தீம் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படம் பற்றிய முதல் அறிவிப்பு அனிருத் இசையில் தரமான BGM உடன் வெளியானது. அந்த இசைதான் இப்போது ஜெயிலர் தீம் மியூசிக் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, Spotify, YouTube தளங்களிலும் வெளியிட்டுள்ளது. இந்த தீம் மியூசிக் வெளியானது முதலே ரஜினி ரசிகர்களால் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

ஏன் இந்த அவசரம்?
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இப்போது எந்தளவிற்கு முடிந்துள்ளது என்பது பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இருந்து அறிவிப்பு இல்லாமல் அப்டேட்கள் வெளியாகாது. ஆனால், ஜெயிலர் படம் உறுதியானதில் இருந்தே, ஜெயிலர் அப்டேட்கள் திடீர் திடீரென வெளியாகி மாஸ்காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை தனுஷின் நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான சிறிது நேரத்திலேயே, ரஜினியின் ஜெயிலர் தீம் மியூசிக் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.