25 ஆண்டுகளாக அடிப்படை வசதி கிடைக்காமல் அவதி -தீர்வுகாண ஏங்கும் காட்டுநாயக்கர் பழங்குடிகள்!

புதுக்கோட்டை அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி, குடிநீர், வீடு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் காட்டுநாயக்கர் பழங்குடி இருளில் தங்களது வாழ்வை கழித்து வரும் துயரம் தொடர்ந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குடுகுடுப்பை தொழில் செய்து வாழ்வை நகர்த்தி வரும் காட்டு நாயக்கர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 11 குடும்ப மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக அவர்கள் அங்கு வசித்து வரும் நிலையில் கூட இதுவரையில் அவர்களுக்கான மின்சார வசதியோ குடிநீர் வசதியோ வீடு வசதியோ அவர்களின் தேவைக்கான எந்த ஒரு அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்காததால் நாள்தோறும் பெரும் துயரத்தோடு அவர்கள் வாழ்வில் நகர்த்தி வருகின்றனர்.

கடந்த தலைமுறையினர் கல்வி குறித்த எந்த ஒரு விழிப்புணர்வு இல்லாத நிலையில் தற்போது அந்த சமூகத்து மக்களின் குழந்தைகள் அருகே உள்ள அரசு பள்ளியில் கல்வி பயில தொடங்கியுள்ளனர். ஆனால் குழந்தைகள் படிப்பதற்கு வீட்டில் மின் விளக்குகள் கூட இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கை கொண்டு இரவு நேரங்களில் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். முறையான வீடு வசதிகள் கூட இல்லாததால் தங்களால் இயன்ற கீற்று மட்டைகள் மற்றும் தார்பாய்களை கொண்டு வீடு அமைத்து அதில் வசித்து வரும் அம்மக்கள் இரவு நேரத்தில் மிகுந்த அச்சத்தோடு அந்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் இந்த குடிசை வீடுகள் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் கடந்த மழையின் போது மலை பாம்பு ஒன்று தங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அதனை கிராம மக்கள் உதவியோடு அப்புறப்படுத்தியதாகவும், மட்டுமின்றி தங்கள் குடியிருப்புப் பகுதி தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் முழுவதும் குடிசைக்குள் புகுந்து விடுவதாகவும் வேதனையோடு கூறுகின்றனர் அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள்.

image
11 குடும்பங்களிலும் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் தங்களுக்கான வீடு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் ஊராட்சி அலுவலகத்திற்கும் அலைந்து அலைந்து  கடைசிவரை யாரும் கருணை காட்டாததால் ஏமாந்து போனதுதான் மிச்சம் என்று ஏமாற்றத்தோடு கூறுகின்றனர் அம்மக்கள். தங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் ஊருக்கெல்லாம் குறி சொல்லி குடுகுடுப்பை அடித்து வாழ்வை நகர்த்தி வரும் தங்கள் வாழ்க்கை நிலை மாற தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வரும் நிலையில் மின்விளக்குகள் கூட இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர் அந்த சமூக மக்கள்.

இந்து காட்டு நாயக்கர் பழங்குடியினர் என்ற தங்களின் பூர்வீகக் குடி ஜாதி சான்றிதழை கூட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு கொடுக்க மறுத்ததால் பழங்குடியினருக்கான சலுகையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தங்கள் மக்கள் ஆண்டாண்டு காலமாக அடித்தட்டு மக்களாகவே வாழ்ந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அவர்கள். இனியாவது தங்களது வாழ்க்கையில் ஒளி வீசவும் தங்கள் குழந்தைகள்  கல்வியில் மேம்படவும் இந்த சமூகத்தில் தங்கள் சமூக மக்களும் ஒரு அங்கமாக திகழ மற்ற சமூக மக்களுக்கு கிடைப்பது போல் தங்களுக்கும் மின்சாரம், குடிநீர், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர தீர்வையும் இந்த அரசு செய்து கொடுக்க வேண்டும் என அந்த சமூக மக்கள் ஏக்கத்தோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் தங்கள் வாழ்வை கழித்து வரும் இந்த சமூக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க: சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடலில் கலக்கும் நீரை சேமிக்க புதிய முயற்சி.!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.