புதுச்சேரி: “பிரதமரின் தேர்தல் அறிவிப்பை ஆளுநர் செயல்படுத்தவில்லை!” – தமிழிசையை சாடிய அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது குறித்தும், உள்ளாட்சித் தேர்தலின் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி அவர்கள் பேசினார். அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி நடத்திய காங்கிரஸ், தி.மு.க கூட்டணிக்கு பாடத்தை புகட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைய மக்கள் வாய்ப்பளித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 16 மாதங்கள் ஆகியும் இன்று வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

மோடி- தமிழிசை

தமிழகத்தில் இல்லாத இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி, புதுச்சேரியில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தி மக்களுக்கு துரோகத்தை இழைத்திருக்கிறது தி.மு.க. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவை நீக்க சரியான நடவடிக்கையை அரசு எடுக்காததால், இன்று வரை தேர்தல் நடைபெறவில்லை. தி.மு.க ஆட்சி செய்யும் தமிழகத்தில்கூட உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. சாதி ரீதியிலான கணக்கெடுப்பு இன்றுவரை புதுச்சேரியில் நடத்தப்படாத நிலையில், குறிப்பிட்ட சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு எப்படி வழங்க முடியும்? இந்த நியாயமான வாதத்தைக்கூட நீதிமன்றத்தில் எடுத்துரைக்காததால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் தங்களது அதிகாரம் குறைக்கப்படும் என்ற தி.மு.க-வின் தவறான எண்ணத்திற்கு வலுசேர்க்கும் விதமாக மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியான பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைந்துள்ளது. மத்திய அரசின் நேரடி பிரதிநிதியாக துணைநிலை ஆளுநர்கள் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற பிரதமரின் தேர்தல் அறிவிப்பை செயல்படுத்த முன் வராதது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாகும். மாநில நிர்வாகம் செம்மைப்படவும், மத்தியில் இருந்து கூடுதல் நிதியைப் பெறவும் உள்ளாட்சித் தேர்தல் அவசியம். அதனை உணர்ந்து துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதுச்சேரி அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வழிவகை காணவேண்டும். புதுச்சேரி மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதுதான் தனது நோக்கம் என அடிக்கடி கூறும் நம் துணைநிலை ஆளுநர் அவர்கள், பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உடனடி உத்தரவை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் அதிகாரங்கள் என்பது பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தங்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில், நீதிமன்றத்தின் மூலம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சதி செய்யும் தி.மு.க-வின் சதி செயலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.