கனடாவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி

ஒட்டாவா,

கனடாவில் கிழக்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ளது ஒண்டாரியோ மாகாணம். இங்குள்ள மிசிசாகா நகரில் இருக்கும் ஓட்டலில் போலீஸ் அதிகாரி ஒருவர் உணவு அருந்திவிட்டு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சரமரியாக சுட்டார். இதில் போலீஸ் அதிகாரியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவசர உதவி எண் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள மில்டன் நகருக்கு சென்ற அந்த மர்ம நபர் சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.

இதனால் பீதியடைந்த மக்கள் உயிரை காப்பற்றிக்கொள்ள அலறியடித்தப்படி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

மில்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவர்கள் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடத்தி போலீஸ் அதிகாரி உள்பட 2 பேரை கொலை செய்த கொலையாளி அருகில் உள்ள ஹாமில்டன் நகரில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் கொலையாளியை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அப்போது அவர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றதாகவும், இதையடுத்து போலீசார் அவரை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனிடையே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது எண்ணங்களும், பலரின் எண்ணங்களும் இன்று மிசிசாகாவில் பணியின் போது கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உள்ளது. இன்றைய துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்களையும் நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் பூரண குணம் அடைய வாழ்த்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.