சென்னை : ஜெயிலர் படத்தில் நான் நடிக்கவே இல்லை என்று சிவகார்த்திகேயன் பட நடிகை தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அண்ணாத்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்திசுரேஷ், குஷ்பு, மீனா, சூரி என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருந்தனர். அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்த போதும் ரஜினியின் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

ஜெயிலர் கதை இதுதான்
இதனால், பல இளம் இயக்குநர்களிடம் கதைகளை கேட்ட ரஜினி, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனின் படத்தில் இணைத்தார். ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைக்க பிளான் போடுகிறது. அந்த சிறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஜெயிலரான ரஜினிகாந்த் அந்த பிளானை முறியடித்து, சிறையை காப்பாற்றுவது படத்தின் கதை என்பதால் படத்திற்கு ஜெயிலர் என தலைப்புவைக்கப்பட்டுள்ளது.

வயதான தோற்றத்தில்
ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கண்ணாடி அணிந்து, கைகளை முன்னாடி கட்டிக்கொண்டு வயதான தோற்றத்தில் ரஜினி நடந்து வருவது போல போஸ்டர் வெளியாகி வைரலானது. இதையடுத்து, ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

நான் நடிக்கவில்லை
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியுள்ளார். ஜெயில் படத்தில் நான் ரஜினிகாந்தின் மகளாக நடிப்பதாக நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று பிரியங்கா அருள் மோகன் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா அருள் மோகன் டான் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.