தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் கருணாஸ். நடிப்பில்150 படத்தை நெருங்கும் அவரின் கைவசம் அரை டஜன் படங்கள் இருக்கின்றன. இதுதவிர கதை நாயகனாக நடித்துள்ள ‘ஆதார்’ படமும் ரிலீஸ் ஆகத் தயராக உள்ளது. படத்தின் ரிலீஸ் பரபரப்பை சைலன்ட் மோடில் வைத்துவிட்டு, நம்முடன் மகிழ்கிறார் கருணாஸ்.
`அம்பாசமுத்திரம் அம்பானி’க்கு பிறகு மீண்டும் ஹீரோவாக `ஆதார்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

“கொத்தனாராக இருக்கும் ஒரு கூலித்தொழிலாளிக்கும் அவர் மனைவிக்கும் நடக்கும் கொடுமையைத்தான் எங்க `ஆதார்’ பேசியிருக்கு. இந்தப் படம் ஆறெழு திரைப்பட விழாக்களிலும் தேர்வாகியிருக்கு. கருணாஸை இந்த பரிணாமத்திலும் பயன்படுத்தலாம்னு மற்ற இயக்குநர்களுக்கும் இது வெளிச்சப்படுத்தும். இந்தப் படத்தின் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் தான் `அம்பாசமுத்திரம் அம்பானி’யை கொடுத்தார். அந்தப் படம் இன்னிக்கு வரைக்குமே எனக்கு ஒரு அடையாளமா இருக்கு. அருண்பாண்டியன், `பாகுபலி’ பிரபாகர், இனியா, ரித்திகானு பலர் நடிச்சிருக்காங்க. என் மீது பல விருப்பு வெறுப்புகள் இருந்தா கூட, இந்தப் படத்தின் மூலமா ஒரு நடிகனா எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க. ஒரு கலைஞனா என்னை நேசிக்கவைக்கும். ஒரு கலைஞனா என்னோட நம்பிக்கை அது. இந்தப் படம் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டு போகும்.”
“சிவங்கை ஏரியாவுல உங்க தோட்டம்தான் பிரபலம் போல?”

“அதை ஏன் கேட்குறீங்க! எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதற்காக ரொம்பவும் கம்மியான காசுக்கு சில ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டேன். ஒரு ஏக்கர் இரண்டரை லட்சத்துக்குள் இருக்கும். நான் அந்த இடங்களை வாங்கி ஆறு வருஷம் ஆகிடுச்சு. கரடி முரடான அந்த நிலத்தை செலவு பண்ணி செம்மைப்படுத்தினேன். கொரோனா பரவல் சமயத்துல எனக்கும் நேரம் கிடைச்சதால அதை உருவாக்கினோம். மொத்தமே 14 ஏக்கர். நாற்பது லட்ச ரூபாய்கிட்ட வரும். கருணாஸுங்கறவன் இத்தனை வருஷம் சினிமாவில் இருக்கான். அவங்கிட்ட ஒரு 40 லட்சம் கூடவா இல்லாமல் இருக்கும். ஆனா அந்த நிலம் வாங்கினதைப் பத்தி என்ன என்னமோ பேசுனாங்க. `இந்த ஃபாரஸ்ட் இடங்களைத்தான் தில்லுமுல்லு பண்ணி வாங்கியிருப்பார்ன்னு’ கிளப்பிவிடுறாங்க. என்ன புத்தி இது? ஃபாரஸ்ட் இடத்துக்குள் நாம போக முடியுமா? யோசிக்கணும்! விகடன்ல என் தோட்டத்தை வீடியோ எடுத்து போட்டதுல அந்த இடத்தை சொல்லி நிறைய பேர் விலையை ஏத்திவிட்டுட்டாங்க. அந்த ஏரியாவுல லே அவுட் போடுறவங்க கருணாஸ் தோட்டம் அருகில்னு சொல்லி நிலத்தை விற்குறாங்க. ‘கருணாஸ் தோட்டத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்திற்கு அருகில்’னு விளம்பரம்போட்டு வியாபாரம் பண்றாங்க.
அது ஒரு வறண்ட பூமி. கருங்கல்லாக கிடக்கற ஒரு பூமி. குறிப்பா, சிவகங்கை மாவட்ட மக்களே கேட்டுக்கோங்க. அப்படி ஒரு பூமியில லட்சம் லட்சமா போட்டு, அதை பண்படுத்தி பயிர் வச்சேன். சராசரியா ஒரு மாசத்துக்கு எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகுது. சராசரி விவசாயினால ஒரு மாசத்துக்கு அவ்ளோ காசு செலவு பண்ணமுடியுமா? அந்த மண்ல இருந்து ஐயாயிரம் ரூபாய் கூட சம்பாதிக்கமுடியாது. அதான் நிதர்சனமான நிலை. நான் என்னுடைய மனத்திருப்திக்காக ஒர் இடத்தை உருவாக்கியிருக்கேன். அதை என் அனுமதிகூட இல்லாமல் ஒண்ணுமே இல்லாத இடத்தை லட்சம் லட்சமா விலையை ஏத்தி வியாபாரிங்க விற்குறாங்க. ஒரு ஏக்கர் ரெண்டரை லட்சத்துக்கு வாங்கின ஒரு இடத்தை இன்னிக்கு 20 லட்சம்னு சொல்லி விற்குறாங்க. இதையும் வாங்குறீங்க. அவ்வளவு காசுக்கு அது தகுதி இல்லை. ஏன்னா, போர் போடணும். கிணறு வெட்டணும். தண்ணீர் பாய்ச்சணும்னு நிறைய வேலைகள் இருக்கு. அந்த செடிகளை உருவாக்குறதுக்கு வேலைக்காரங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். இவ்வளவையும் செய்துதான் உருவாக்க முடியும். வியாபாரிகளுக்கு தேவை காசு. அதனால வியாபாரிங்க திட்டமிட்டு ஏமாத்துறாங்க. மக்கள் உஷாரா இருந்து வாங்குங்க.”
“உங்க மகன் கென் கருணாஸ், இப்ப தனுஷிடம் உதவி இயக்குநரா இருக்கார்னு கேள்விப்பட்டோமே..?

“நான் சினிமாவுல இருக்கேன் என்பதற்காக என் பையனை கொண்டு வரல. இயற்கையாகவே அவனுக்கு சினிமாவுக்கான தகுதி, திறமை இருக்கு. அதைப்போல சமீபத்தில் ஒரு படத்திற்காக என் மனைவியை பாட வச்சு, ஒரு பாடலை கம்போஸ் பண்ணினேன். எனக்கு அந்த பாட்டுல திருப்தி இல்ல. உடனே என் மனைவிக்கிட்ட நீ தப்பா எடுத்துக்க வேணாம். நான் வேறொரு பாடகியை பாட வைக்கப் போறேன்னு சொன்னேன். நான் செய்யற வேலைக்கு நான் நேர்மையா இருப்பேன். என் நண்பர்கள்ல முதன்மையானவரா வெற்றிமாறன் இருக்கார். `அசூரன்’ல கென்னின் பழகுற தன்மை, உழைப்பு தனுஷ் சாருக்கு பிடிச்சிருந்தது. அதனால `திருச்சிற்றம்பலம்’ படத்துல உதவி இயக்குநரா ஒர்க் பண்ணவச்சார். ‘வாத்தி’ படத்திலும் உதவி இயக்குநரா கென் ஒர்க் பண்றதை பார்த்த அந்தப் பட இயக்குநர் இவன் நடிப்பு சொல்லிக் கொடுக்கற விதத்தை மானிட்டர்ல கவனிச்சிருக்கார். உடனே தனுஷ்கிட்ட சொல்லி, இந்த படத்துல கென்னுக்கு ஒரு நல்ல ரோல் இருக்குதுனு சொல்லி நடிக்கவும் வச்சிருக்கார். ஒரு தகப்பனா சினிமாவில் அவனுக்கு நல்ல பாதையை ஏற்படுத்தி கொடுக்கறது என் கடமை.”