வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட நெல்வாய், சாத்து மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக புதிதாக பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சாத்து மதுரை பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கு முன்பு, வேறு இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. ஆனால் அந்த இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லை. நிழற்குடைகள் அமைத்த பின்பு பேருந்துகள் அங்கு நிற்கும் என எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், புதிதாக அமைத்த நிழற்குடைகளுக்கு அருகில் பேருந்து நிற்காமல் ஏற்கனவே நிற்கும் இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மீண்டும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிழற்குடைகள் அமைத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் கால்நடைகளுக்கான கொட்டகையாகவும் தீவனங்கள் வைக்கும் இடமாகவும் உள்ளது.

மேலும் இரவில் சிலர் மது அருந்தவும் பேருந்து நிறுத்த நிழற்குடைகளை பயன்படுத்துவதால், இப்பகுதி வழியாக செல்லும் பெண்கள் ஒருவித அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து வேலூர் பேருந்து நிலைய போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் விகடன் சார்பாக நேரில் சென்று கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல், `இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் வேலூர் தலைமை போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொள்ளுங்கள்’ எனக் கூறினர். பின்பு வேலூர் தலைமை போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டபோது, அதிகாரி ஒருவர் சரியாக பதிலளிக்காமல் பொதுமக்களை குற்றம்சாட்டி பேசினார். பின்பு அவரின் பெயரை நாம் கேட்ட போது பதில் அளிக்காமல் அழைப்பை துண்டித்துவிட்டார்.






பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை, அரை மணி நேரத்தில் புகாருக்கு உள்ளான உள்ளூர் அரசு பேருந்துகள் நிற்கும் இடமான வேலூர் பழைய பேருந்து நிலைய போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, `இனி அரசு பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிறுத்த நிழற்குடைகளுக்கு அருகில் நிறுத்த வேண்டுமென ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். அதை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்வோம். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேலூர் தலைமை போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது” எனக் கூறினார்.

இந்த நிலையில், இன்று காலை முதல் பேருந்துகள் நிழற்கூடத்தில் நின்று செல்கிறது. பழைய இடங்களில் பயணிகள் நின்றாலும், அவர்களை நிழற்கூடத்தில் நிற்க சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பயணிகள் இனி நிழலில் பேருந்துக்கு காத்திருக்கலாம் என்பதால் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.