2 ஆண்டுகளுக்குப்பின் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் வேகமாக நிரம்பும் படுக்கைகள்-ஏன்?

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் புளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கிற மாதங்களில், திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் ஏற்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மழைக்காலங்களில் ஏற்படும் பிளு காய்ச்சல் பரவல் குறைவான அளவில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஓரே நாளில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 110 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
image
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கும் நிலையில் ப்ளு காய்ச்சலினால் சிகிச்சை பெற அதிக குழந்தைகள் நாள்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களுக்கு சென்றாலும் காய்ச்சல் விட்டு விட்டு வருவதால் அரசு மருத்துவமனையை நாடி வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி ஆகியவை இரண்டு விட்டு விட்டு வருவதாலும், காலம் நிலை மாற்றம் மற்றும் உணவு முறை போன்றவற்றால் இந்த வருடம் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தரப்பிடம் கேட்டபோது, 2019 ஆம் வருடம் மழைக்காலங்களில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் அளவே தற்போது தொடர்வதாக கூறுகின்றனர்.
image
அதேநேரம், கடந்த இரண்டு வருடங்களில் கோவிட் காரணமாக ப்ளு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்ததாகவும் தற்போது சிகிச்சை பெறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அதற்கு ஏற்றார் போல மருத்துவ படுகைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் நல மருத்துவர் பிரகாஷ் நம்மிடையே பேசுகையில், “பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல், ஒரு குழந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தைக்குப் பரவுவதால் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் இருந்தால்கூட வெளியில் அனுப்பாமல் இருப்பதுதான் நல்லது. மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை காய்ச்சி கொடுப்பது அவசியம். உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கு ஏற்றார் போல குழந்தைகள் மருத்துவர் வழங்கும் அறிவுரைப்படி மருந்துகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
image
தமிழக சுகாதாரத் துறையும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு பரவி வரும் ப்ளூ காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.