போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட டிரைவரை உடனே தூக்கிலிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
மாற்றப்பட்டிருந்த குழந்தை துணி..
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஒரு தனியார் ‘கிண்டர் கார்டன்’ பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் பள்ளி வேனில்தான் சென்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அப்பள்ளியில் படிக்கும் 3 வயது குழந்தை ஒன்று பள்ளி வேனில் இருந்து இறங்கியுள்ளது. அப்போது குழந்தை காலையில் அணிந்து சென்ற துணி மாற்றப்பட்டிருப்பதை அதன் தாயார் கவனித்தார்.

பயந்து போயிருந்த சிறுமி
பின்னர், சிறுமியிடம் யார் துணியை மாற்றிவிட்டது என அவர் கேட்டுள்ளார். ஆனால் குழந்தை சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், குழந்தை பயத்திலும் நடுங்கியுள்ளது. இதையடுத்து, பள்ளியை தொடர்புகொண்ட அவரது தாயார், “யார் குழந்தையின் துணியை மாற்றிவிட்டது” எனக் கேட்டுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியைகள், ஊழியர்கள் அனைவரும் தாங்கள் மாற்றவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தாயார், தனது மகளை ஆசுவாசப்படுத்தி, அவரிடம் என்ன நடந்தது என மெதுவாக விசாரித்துள்ளார்.

தெரியவந்த கொடூரம்
அப்போது சிறுமி, வேனில் வரும் போது ஓட்டுநர் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதை கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அங்கிருந்த மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், நேற்று முன்தினம் அந்த சிறுமியை போலீஸார் பள்ளிக்கு அழைத்து சென்றனர். இதில், போலீஸார் முன்னிலையில் பள்ளி வேன் டிரைவரை சிறுமி சரியாக அடையாளம் காட்டினாள்.

கைது – வாக்குமூலம்
இதன் தொடர்ச்சியாக, போலீஸார் பள்ளி வேன் டிரைவர் கிஷோர் குமாரை (32) காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், வேனின் பெண் உதவியாளர் முன்னிலையிலேயே சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால் பாலியல் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பெண் ஊழியரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் வேன் டிரைவர் கிஷோர் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொந்தளிப்பு
இந்த கொடூர சம்பவம் தொடர்பான செய்திகள் நேற்று உள்ளூர் ஊடகம் முதல் தேசிய ஊடகங்கள் வரை வெளியாகின. 3 வயது பிஞ்சுக் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல, டிரைவர் கிஷோர் குமாரின் வீடு அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

வீடு இடிப்பு
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று இரவு கிஷோர் குமாரின் வீட்டை சுத்தியல், கடப்பாரை உள்ளிட்டவற்றால் இடித்துத் தள்ளினர். தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளும் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. இதுகுறித்து கேட்டபோது, கிஷோர் குமாரின் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்தது. இதை நாங்களே இடிக்க நினைத்தோம். இப்போது மக்களே அதை செய்துவிட்டனர் என்றனர்.
இதனிடையே, வீட்டை இடித்து தள்ளிய மக்கள், கிஷோர் குமாரை உடனே தூக்கிலிட வேண்டும் என கோஷமிட்டனர்.