நியூயார்க்:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சஜித் மிர்ரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மற்றொரு அண்டை நாடான சீனா ஆதரவாக இருந்து வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலரை, சர்வதேச பயங்கரவாதி களாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள பல தீர்மானங்களுக்கு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
கடந்த நான்கு மாதங்களில், இவ்வாறு இரண்டு முயற்சிகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராவுப் அசார் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதின் உறவினர் அப்துல் ரெஹ்மான் முகிக்கு எதிரான தீர்மானங்களுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் – இ – தொய்பா முக்கிய தளபதியான சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா மற்றும் இந்தியா சார்பில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் சமீபத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், இந்த தீர்மானத்தை சீனா நிராகரித்துள்ளது. கடந்த, நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியாவின் முயற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேடப்படும் பயங்கரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட சஜித் மிர் தலைக்கு, 39 கோடி ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இறந்து விட்டதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் இதை ஏற்கவில்லை.எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளை கண்காணித்து வருகிறது.
இந்த சர்வதேச அமைப்பு, ‘கிரே’ எனப்படும் மிகவும் மோசமான செயல்பாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை வைத்துள்ளது. இதனால், சர்வதேச நிதியுதவி பாகிஸ்தானுக்கு கிடைக்க வில்லை.இந்நிலையில், கடந்த ஜூனில், சஜித் மிர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்தே, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தீர்மானம் தாக்கல் செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement