வாலாஜா: காதலித்து பதிவு திருமணம் செய்த மனைவியை பிரித்து சென்றதால் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் சக்திவேல்(25), பி.இ.பட்டதாரி. சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரும், உடன் வேலை செய்யும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி சக்திவேலுவும், இளம்பெண்ணும் திருவொற்றியூர் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்துள்ளனர். இதையறிந்த பெண்ணின் வீட்டார். வாலாஜாவுக்கு வந்து சக்திவேலின் உறவினர்களிடம் தகராறு செய்தார்களாம். இதையறிந்த சக்திவேலும், அவரது காதல் மனைவியும் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். டிஐஜி அலுவலக உத்தரவின்பேரில் வாலாஜா போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது இளம்பெண், சக்திவேலுடன் செல்வதாக கூறியதால், போலீசார் இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி சக்திவேல் தனது காதல் மனைவியுடன் பெங்களூரில் உள்ள கம்பெனியில் பணியாற்ற மாறுதலாகி சென்றுள்ளார். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர், திருவலம் சேர்க்காடு கூட்ரோட்டில் சக்திவேல் சென்ற பஸ்சை வழிமறித்து நிறுத்தி மகளை வலுக்கட்டாயமாக அழைத்துசென்றுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சக்திவேல் அன்று எலிபேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கியுள்ளார். வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்திவேல் கடந்த 16ம் தேதி இறந்தார்.
சக்திவேலின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், திருமணமாகி சில நாட்கள் கூட உன்னுடன் இல்லை, உன்னை பிரியவேண்டிய நிலை உள்ளது. பிரிவை தாங்க முடியவில்லை. அடுத்த ஜென்மம் இருந்தால் உன்னை சந்திக்கிறேன் என உருக்கமாக எழுதியுள்ளார்.