வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாபின் சண்டிகர் பல்கலை விடுதியில் மாணவியர் குளிப்பதை படமாக்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலையின் மாணவியர் விடுதியில், 17ம் தேதி இரவு மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியின் பொது குளியலறையில், மாணவியர் குளிப்பதை சக மாணவி ஒருவர், ‘மொபைல் போனில் வீடியோ’ எடுத்து அதை வெளிநபர்களுடன் பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டினர்.
![]() |
மேலும், விடுதி வார்டனின் நடத்தை குறித்தும் புகார் தெரிவித்தனர்.இந்தக் குற்றச்சாட்டை பல்கலை நிர்வாகம் மறுத்தது. போலீசார் விசாரணை நடத்தி, மாணவி ஒருவரை கைது செய்தனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனை ஆய்வு செய்ததில், அந்த மாணவி தன் அரைகுறை வீடியோக்களை தன் காதலனுடன் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.
அதில் மற்ற மாணவியரின் வீடியோக்கள் இல்லை என போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் காதலனான, ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும், 31 வயது நபர்ஒருவரையும் கைது செய்து, இருவரையும் பஞ்சாப் அழைத்து வந்தனர். அலட்சியமாக செயல்பட்ட விடுதி வார்டன்கள் இருவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
பல்கலைக்கு, வரும் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சமூக வலைதளங்களில் உறுதி செய்யப்படாததகவல்கள் வலம் வருகின்றன; அவற்றை யாரும் நம்ப வேண்டாம். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம்; அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி குர்ப்ரீத் கவுர் தியோ தலைமையில் மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாரபட்சமின்றி விசாரணை நடத்துவர்; உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.போலீஸ் தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்கலை மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement