லக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவை போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தினார்கள். உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்றே சமாஜ்வாதி கட்சி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மோசமான சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் தலைமையிலானோர் சட்டமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பாதி வழியில் தடுத்து நிறுத்தினார்கள். இதன் காரணமாக பேரணி தடைபட்ட நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில் போலீசார் அனுமதிக்கப்பட்ட வழியில் செல்லாமல் வேறு வழியாக பேரணி நடத்தப்பட்டதால் போலீசார் அதனை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.