20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் ரூ.4¼ கோடிக்கு ஏலம்

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது எஸ்.ஏ. 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்காக உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் ஐ.பி.எல். அணிகளை நிர்வகிக்கும் இந்திய தொழிலதிபர்களே வாங்கியுள்ளனர்.

அந்த அணிகளுக்கு டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம்.ஐ. கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி ஏற்கனவே நடந்தது. இதில் 2 முதல் 5 வீரர்களை ஒவ்வொரு அணிகளும் தேர்வு செய்தன.

சென்னை சூப்பர் கிங்சுக்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்சுக்கு பாப் டு பிளிஸ்சிஸ் கேப்டனாகவும், ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் எஸ்.ஏ. 20 ஓவர் போட்டிக்கான வீரர்களின் ஏலம் நேற்று கேப்டவுனில் நடந்தது. ஏலப்பட்டியலில் மொத்தம் 533 வீரர்கள் இடம் பெற்றனர்.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 17 வீரர்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் 6 அணிகளின் நிர்வாகிகளும் ஏலம் கேட்டனர். உள்நாட்டு வீரர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தனர்.

இதன்படி அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்காவின் இளம் விக்கெட் கீப்பர் டிரிஸ்டன் ஸ்டப்சை வாங்க எம்.ஐ. கேப்டவுன், சன்ரைசர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து விலையை உயர்த்தியபடி இருந்தன. இறுதியில் ஏறக்குறைய ரூ.4¼ கோடிக்கு அவரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியது.

இதே போல் ரிலீ ரோசவை (தென்ஆப்பிரிக்கா) ரூ.3.10 கோடிக்கு பிரிட்டோரியா கேபிட்டல்சும், ரீஜா ஹென்ரிக்சை ரூ.2 கோடிக்கு ஜோபர்க் சூப்பர் கிங்சும், மார்கோ ஜேன்சனை ரூ.2¾ கோடிக்கு சன்ரைசர்சும், வான்டெர் டஸனை ரூ.1¾ கோடிக்கு எம்.ஐ. கேப்டவுனும், ஜாசன் ராயை (இங்கிலாந்து) ரூ.68 லட்சத்துக்கு பார்ல் ராயல்சும் வாங்கின.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.