திமுக ஆட்சியை கலைக்க திட்டம்? குண்டை தூக்கிப் போடும் கூட்டணி கட்சி!

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையை பதட்டமான இடமான மாற்றி விடக்கூடாது எனத் தெரிவித்த அவர், கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் இந்த மாநகரம் அமைதியாக இருக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விரும்பவில்லை என தெரிவதாகவும், நேற்று கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேணடும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அண்ணாமலை காவல் துறை அதிகாரிகளை எச்சரிப்பது,நாட்டையே முடக்குவோம் என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், அண்ணாமலை சாதாரண அரசியல்வாதி இல்லை, ஐபிஎஸ் படித்துவிட்டு வந்திருக்கும் நிலையில் வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே இப்படி பேசுகின்றார் என பாலகிருஷ்ணன் கூறினார்.

மாநில அரசை, முதல்வரை, காவல் துறையை மிரட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர் , அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்,அவரது பேச்சு வன்முறை வெறியை வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மாநில முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார், தமிழக காவல் துறையை மிரட்டுகின்றார், பேட்டை ரவுடியை போல அண்ணாமலை பேசுகின்றார் என்று குற்றம்சாட்டிய அவர், 356 பிரிவை பிரகடனம்படுத்தி, தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர சிலர் திட்டமிட்டு வருவதாக கூறிய அவர், ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், காந்தி கொல்லப்பட்டதை கொண்டாடியவர்களுக்கு அவரது பிறந்த நாளில் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். சிபிஐ,சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனிதநேய மனித சங்கிலி போராட்டத்தை அக்டோபர் 2 ம் தேதி நடத்த இருக்கின்றன என தெரிவித்த அவர், மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுகு கண்களை உறுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.

இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்துள்ளது. பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து இருக்கின்றது என தெரிவித்த அவர், இவற்றை மூடி மறைக்க பா.ஜ்கவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது எனக்கூறிய பாலகிருஷ்ணன், ஆ.ராசா பேசிய மேடையில் தானும் இருந்ததாக கூறினார். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர் என தெரிவித்த அவர், வர்ணாசிரம தர்மத்தில் சூத்திரனை வேசியின் மகன் என்று சொல்லி இருப்பதைதான் ராசா சுட்டிக்காட்டினார்.. இதற்காக வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் நமக்கு கோபம் இருக்க வேண்டுமே தவிர, அதனை எடுத்து சொன்னவர் மீது கோபப்பட கூடாது என்று கே. பாலகிருஷ்ணன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.