விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே உள்ள அரசகுலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு (33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் சஞ்சனா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்க தன் மனைவி மற்றும் மகள் சஞ்சனாவுடன் சென்றார்.
அப்போது பூச்சிக்கொல்லி மருந்தில் தண்ணீர் சேர்த்து ஸ்பிரேயரில் ஏற்றி முதுகில் கட்டிக்கொண்டு ராமு பயிர்களுக்கு தெளிக்கச் சென்றார். பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமி சஞ்சனா அந்த காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீர் விட்டுக் குடித்திருக்கிறார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சஞ்சனா போராடினார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த ராமு தன் மகளை உடனடியாக மீட்டு காரியாப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சஞ்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தோட்டத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்று அலட்சியத்தில் குழந்தை உயர் இழந்த சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.