லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பாஜக குறி வைக்கும் தொகுதிகள்?

பாரதிய ஜனதா கட்சி 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது இயல்பாகவே மக்களிடம் ஏற்படும் அதிருப்தி உள்ளிட்டவைகளால் 2024 தேர்தல் பாஜவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது. எனவே, அதற்கான பல்வேறு வியூகங்களையும் அக்கட்சி வகுத்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அதில், சில வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து பாஜகவின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. கர்நாடகாவில் ஏற்கனவே ஆட்சியில் உள்ள நிலையில், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் காலூன்றுவதற்கான முயற்சியை எடுத்து, அதற்கான முன்னோட்டமாக மக்களவை தேர்தலை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பாஜக நீடித்து வருகிறது. இந்த கூட்டணிக்குள் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும், பொதுவெளியில் நட்புறவோடு இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளை பாஜக கேட்டது. ஆனால், 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியது. ஆனாலும், இரு கட்சிகளுமே அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலைதான் என்றாலும், 4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளது பாஜக.

அதேசமயம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது தலைமையிலான கூட்டணி அமைக்கவே பாஜக விரும்புகிறது. அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி பிரச்சினைகளால் தங்களை பிரதான எதிர்க்கட்சியாக காட்ட முயற்சித்து வரும் பாஜக, இரட்டை இலக்க தொகுதிகளில் களம் காணவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த விருப்பத்தை எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின்போதே அவரிடம் அமித் ஷா தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டது எனவும், அனைவரும் இணைந்தால் கூட அக்கட்சிக்கு குறைவான வாக்குகளே விழும் என தன்னிடம் இருக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர் கறார் காட்டியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த பின்னணியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தின் சில தொகுதிகளை குறி வைத்து பாஜக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வாங்கினாலும், பாஜகவுக்கு ஏற்கனவே கனிசமான வாக்கு வங்கி உள்ள கோவை, கன்னியாகுமரி, மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தொகுதியான கரூர், வழக்கமாக போட்டியிடும் சிவகங்கை, சென்னையில் குறிப்பிட்ட சில தொகுதிகள், பாஜகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் மதுரை, தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது.

நீலகிரியில் திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்தில் பாஜக காட்டிய தீவிரத்தில் இருந்தும், சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டதில் இருந்தும் இதனை அறிந்து கொள்ளலாம். இந்த தொகுதிகளில் நிதி விவகாரங்களை கவனிக்க மத்திய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், பாஜகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களை அடிக்கடி அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.