புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தை உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 424 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியது: “புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 332, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 38, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 54 என மொத்தம் 424 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனர். இதில் ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 30, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 4 என மொத்தம் 34 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 120, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 19, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 14 என மொத்தம் 153 குழந்தைகள் மருத்துவமனையில் உள்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 99 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் புதிதாக ஒரு குழந்தை உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவர், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்” என்று ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.