அதிமுக, அமமுக இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் உச்சபட்ச பதவி!

திமுகவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி அண்மையில் நடைபெற்ற 15 ஆவது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் அதிகாரபூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

இதில் முக்கியாக, திமுகவில் உசசபட்ச பதவியாக கருதப்படும் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் ஏழு மாவட்டச் செயலாளர்கள் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அதிமுக, அமமுக மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து வந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு இந்த உயர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதிலாக அண்ணாதுரை எம்எல்ஏ, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த இன்பசேகரனுக்கு பதிலாக அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் தொகுதி எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் மா.செ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி கடந்த தேர்தலின்போது திமுகவில் இணைந்த மதியழகன் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்துவரும் நிலையில் தற்போது அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த வரதராஜனுக்கு பதிலாக தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராமச்சந்திரனுக்கு பதிலாக தொண்டமுத்தூர் ரவியும், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்துவந்த மூர்த்திக்கு மாற்றாக செந்திலும் புதிய மா.செ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்த பூபதிக்கு பதிலாக சந்திரன் அந்த பதவிக்கு வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.