நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழப்புவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து உலக வங்கி பாராட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நேற்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாலத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos கருத்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கி இந்த நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தொடர்ந்து நிருவாக மறுசீரமைப்பு, கடன் பிரயோகம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தைத் தொடர அரசாங்கம் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர, அரசாங்க நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.