புதுடில்லி :புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் வெளி நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான வெளிநோயாளிகள் வருகின்றனர். இவர்களை பற்றிய விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.
இதன் காரணமாக பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 16 முதல், வெளிநோயாளிகள் விபரங்களை பதிவு செய்யும் துறையில் உள்ள ஊழியர்கள், பணி நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், அதற்கென உள்ள இடத்தில் மொபைல் போன்களை வைத்து விட்டு செல்ல வேண்டும். பணி முடிந்ததும், மொபைல் போன்களை பெறலாம்.
எய்ம்ஸ் வளாகத்துக்குள் நோயாளிகளும், அவர்களது உதவியாளர்களும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. இதை போக்கும் வகையில், ஏற்கனவே உள்ள பஸ் வசதியுடன், கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 50 பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement