டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட பனிச்சரில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் 28 பேர் உட்பட மொத்தம் 41 பேர், இமயமலையின் திரவுபதி கா தண்டா சிகரத்தில் இருந்து பயிற்சி முடித்து நேற்று முன்தினம் முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, 17 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அவர்கள் சிக்கினர். அப்போது, 10 பேரின் சடலங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை 4 சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டு இருப்பதாக போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
நேற்று காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, காயமடைந்த நிலையில் 6 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் மத்லி ஹெலிகாப்டர் தளத்துக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றொரு ஹெலிகாப்டர் மூலமாக 8 பேர் மீட்கப்பட்டனர். மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
* சவீதா கன்ஸ்வால் பலி
இந்தாண்டு மே மாதத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உத்தர்காசியை சேர்ந்த சவீதா கன்ஸ்வாலும் இந்த பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளார். இவர் பயிற்சியாளராக இக்குழுவில் சென்றார்.