காமெடி நடிகராக நமக்குப் பழக்கப்பட்டவர் நடிகர் போண்டா மணி. இவர் சமீபத்தில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வது போல நடித்து ஒரு லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக அவருடைய மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை ஏமாற்றியவரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொள்ள நடிகர் போண்டாமணியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

“23-ம் தேதி முன் பின் அறிமுகமில்லாத ஒருத்தன் ஆஸ்பத்திரிக்கு வந்தான். எனக்கும் சரி, என் குடும்பத்துக்கும் சரி அவன் யாருன்னே தெரியாது. நான் ஐசியூவில் இருந்ததால அவன் மாஸ்க் போட்டு வந்து என்கிட்ட பேசினான். நான் இலங்கை தமிழன் தான், உங்களுடைய சொந்தம்தான் இங்க இன்ஸ்பெக்டர் ஆக ஒர்க் பண்றேன்னு சொன்னான். அந்த நேரத்தில் அவன் யாரு, என்னன்னு யோசிக்கத் தோணல.
என் மனைவிகிட்டேயும், என் மகள்கிட்டேயும் ரொம்ப நல்லா பேசியிருக்கான். அவங்களுக்குத் தேவையான உதவிகள் செய்திருக்கான். அவங்களும் நம்பி பேசிட்டு இருந்துருக்காங்க. 26-ம் தேதி நான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கிளம்பினப்பவும் அவன் எங்க கூடவேதான் வந்தான். வரவு, செலவு கணக்கு பார்க்கணும், ஆனா அதை எப்படிப் பார்க்கிறதுன்னு என் மனைவி பேசிட்டு இருந்தப்ப ஏடிஎம் கார்டுலேயே வங்கி கணக்கு விவரங்களை எடுக்கலாம். நான் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லவும் என் மனைவியும் அவன்கிட்ட ஏடிஎம் கார்டு கொடுத்து அனுப்பிட்டாங்க.

கார்டு எடுத்துட்டு போனவன் ரொம்ப நேரம் ஆகியும் காணுமேன்னு 8 மணி போல போன் பண்ணினோம். அப்ப கூட கார்டு என் கையிலதான் இருக்கு. எமர்ஜென்சியா மருத்துவமனைக்கு வந்துட்டேன். வந்துடுறேன்னு சொன்னான். அவன் மிரட்டி கொண்டுபோய் பணம் பறிக்கத்தான் திட்டம் போட்டிருக்கான். கார்டு கையில கிடைக்கவும் பணத்தை எடுத்திருக்கான். ஒரு லட்சம் எடுத்த மெசேஜ் செல்போன்ல வந்ததும் பெஞ்சமின்தான் அதைப் பார்த்துட்டு எங்ககிட்ட சொன்னார். விவரத்தைச் சொல்லவும் அவர் உடனே கார்டை பிளாக் பண்ணிட்டார்.
27-ம் தேதி காலையில் என் மனைவியும், மருமகளும் ஐயப்பந்தாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தாங்க. தொடர்ந்து பெஞ்சமினும், என் மனைவியும் அமைச்சர் சேகர் பாபுவை சந்திச்சு விவரத்தைச் சொன்னாங்க. அவர் உங்க கணவரை ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க… நான் உடனடியா ஆக்ஷன் எடுக்கச் சொல்றேன்னு சொல்லியிருக்கார். ஐயப்பந்தாங்கல் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து விசாரிச்சிட்டு போனார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வந்து ‘2 நாளில் பிடிச்சு தரேன்… நீங்க கவலைப்படாதீங்க’ன்னு சொன்னார். அப்ப கூட எனக்குப் பெருசா நம்பிக்கையில்லை. ஆனா, ‘உடனடி ஆக்ஷன் எடுத்து அவனை மடக்கிப் பிடிச்சாச்சு… அவனும் உண்மையை ஒத்துக்கிட்டான்’ன்னு சொன்னார்.

மக்கள் திருட்டு விஷயத்துல ஜாக்கிரதையாக இருக்கணும்னுதான் சினிமாவில் திருட்டு பற்றி நடிச்சுக் காட்டுறாங்க. நானே திருடுற மாதிரியெல்லாம் படத்துல நடிச்சிருக்கேன். இன்னைக்கு நானே ஏமாந்துட்டேன்!
ரெண்டு நாள் கழிச்சு கோர்ட்டில் காசை வாங்கிக்கச் சொல்லியிருக்காங்க. இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்! சினிமாவைப் பார்த்துதான் எல்லாரும் கெட்டுப் போகிறதா சொல்றாங்க… சினிமாவில் வர்றது நன்மைதான்னு புரிஞ்சுக்கோங்க!” என்றார்.