20000 காலியிடங்கள் | இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? – மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: தமிழில் எஸ்எஸ்சி தேர்வு வினாத்தாள் அமையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாஃப் செலக்சன் கமிசன் தேர்வுக்கான வினாத்தாள் இந்தியில் மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பு தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ” மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20000 காலியிடங்களுக்கு “ஸ்டாஃப் செலக்சன் கமிசன்” பணி நியமன அறிவிக்கையை 17.09.2022 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகப் பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

பணி நியமனத் தேர்வு கேள்வித் தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே – இந்தி, ஆங்கிலம் – இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்கு இடம் இல்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்தியல்லா மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது ஆகும். மேலும் இப்படி பணி நியமனம் பெறப் போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப் போகிறார்கள்?

ஏற்கெனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிகக் குறைவாக உள்ளதென்ற பிரச்சினைகள் பல துறைகளின்/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டாப் செலக்சன் கமிசன் பணி நியமனங்களும், மொழிச் சமத்துவம் கடைப்பிடிக்கப்படாததால் அத்தகைய பாரபட்சத்தை உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது. எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாஃப் செலக்சன் கமிசன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.