டாக்கா-நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரசித்தி பெற்ற கோவிலில் இருந்த காளி சிலை, விஷமிகளால் உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வங்கதேசத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இங்கு ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் அடிக்கடி விஷமிகளால் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
கடந்தாண்டு தசரா பண்டிகையின் போது, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, ஹிந்து கோவில் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்டில் டாக்காவில் உள்ள, ‘இஸ்கான்’ கோவிலை ஒரு கும்பல் தாக்கி சேதப்படுத்தியது. அங்கிருந்த பக்தர்களும் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில், வங்கதேசத்தின் ஜெனதா பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் இருந்த காளி சிலையை, ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தியது.
சிலையை இரண்டாக உடைத்த அந்த கும்பல், அதன் தலைப் பகுதியை கோவிலுக்கு வெளியில் வீசி விட்டுச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement