குழந்தை திருமணம்: இந்தியாவின் மோசமான மாநிலங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இணைந்து மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. கருவுறுதல், குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாக வைத்து சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கணக்கெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில், சிறுமிகள் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்யும் சராசரி 5.8 சதவீதமாக உள்ள அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 18 வயதாவதற்கு முன்பே நடக்கும் பெண் குழந்தைகளின், குழந்தைகள் திருமணத்தின் விகிதம் 1.9 ஆக உள்ளது. கேரள மாநிலத்தில் இது 0.0 சதவீதமாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த சதவீதம் 5.8 ஆகவும் உள்ளது.

ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில், மொத்த பெண்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 21 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்யப்படுவதும் அந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, 21 வயது ஆவதற்கு முன்பே பெண்களுக்கு திருமணம் ஆகம் விகிதமானது நாட்டில் 29.5 சதவீதமாக இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் 54.9 சதவீதமாகவும், ஜார்கண்டில் 54.6 சதவீதமாகவும் உள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பெருகி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்திருக்கும் தகவல்கள் பெண் சமுதாயத்தின் மீதான கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குற்ற சம்பவங் களும் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகளவில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பில்லி சூனியம் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர், அச்சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில், நான்கு நாட்களுக்குப் பின் அந்த சிறுமி உயிரிழந்தார். இதேபோல், 14 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.