திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரும் நேற்று மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தங்கள் குடும்பத்துடன் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்திருந்தனர்.
இவர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துச் செல்ல காவிரி ஆற்றுக்கு வந்தவர்கள் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நாகராஜ் மகன் விஷ்வா (24), ஜெகநாதன் மகன் புருஷோத்தமன் (18) ஆகிய இருவரும் ஆற்றின் புதை மணலில் சிக்கியுள்ளனர். அங்கு தண்ணீர் வரத்து அதிகமானதால் அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
அதேசமயத்தில் சுழலில் சிக்கிய இரண்டு பெண்கள் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முசிறி தீயணைப்பு துறையினருக்கும் லாலாபேட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களின் உடலை தேடிவந்தநிலையில், புருஷோத்தமனை இறந்த நிலையில் மீட்டனர். அதன்பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்துவந்த கரூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மற்றொரு இளைஞரின் உடலை தேடி வருகின்றனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.