
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சுனாமி ஏற்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது ஜப்பானில் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம். மேலும், இந்தப் பேரழிவில் 19,759 பேர் இறந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பானில் யசுவோ தகமாட்சு-யூகோ தகமாட்சு தம்பதியர் வசித்து வந்தனர். சுனாமியின்போது தம்பதி வசித்து வந்த ஒனாகவா பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது யூகோ காணமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயிர்பிழைத்த அவர் கணவர் யசுவோ, சுமார் 11 வருடங்களாக தன் மனைவியைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.
தற்போது 65 வயதாகும் யசுவோ, ‘என்னுடைய மனைவியின் உடலை எப்படியாவது கண்டுபிடிப்பேன்’ என்ற நம்பிக்கையுடன் இரண்டு ஆண்டுகள் நிலத்திலும், 2013-ம் ஆண்டில் இருந்தது கடல் பகுதியிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தற்போது ஒவ்வொரு வாரமும் தன் மனைவியின் உடலைத் தேடி அவர் கடலில் டைவிங் செய்து வருகிறார்.

இது தொடர்பாக யூகோ தகமாட்சு கூறியதாவது; “பேரழிவுக்குப் பிறகு அவள் செல்போன், பிற உடைமைகள் மீட்கப்பட்டன. யூகோவிடமிருந்து கடைசியாக ஒரு செய்தி வந்தது. ஆனால், அவளுடைய உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் சாகும்வரை அவளைத் தேடிக்கொண்டே இருப்பேன்” என்றார்.