ஊட்டி: ஊட்டி அருகே மஞ்சனகொரை பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சனகொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சென்னையை சேர்ந்த பத்மினிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டும் பணியை அண்மையில் அவர் துவக்கினார். ஊட்டியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.
இதற்காக, சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து 8 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள், வீடு கட்டும் இடத்தில் தற்காலிக தகர ெஷட் அமைத்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். வீடு கட்டும் இடத்திற்கு அருகே சுமார் 35 அடி நீளம், 15 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட திட்டமிடப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை முதல் கீழ்புறத்தில் மண் தோண்டும் பணியில் சேட், வேலு, முருகன், சக்தி ஆகிய 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென 15 அடி உயர மண் திட்டு இடிந்து கீழ்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த சேட், வேலு ஆகியோர் மீது விழுந்து முழுமையாக மூடியது. மற்ற 2 தொழிலாளர்களும் குழிக்கு வெளியே பாய்ந்து குதித்து உயிர் தப்பினர். சுமார் 5 அடிக்கும் மேல் மண் மூடிய நிலையில் அதில் புதைந்து சேட் (55), வேலு (28) ஆகிய 2 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் ஊட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி மண்ணில் புதைந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.